
அமெரிக்காவில் சென்ற நுாற்றாண்டின் அறுபதாவது ஆண்டுகளில் ஆப்பிரிக்க மரபு வழி கறுப்பின மக்கள் வெள்ளையரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்ட ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ்விக்கப்படுவதும் ஒதுக்கப்படுவதும் சட்டப்படி தடை செய்யப்பட்டு, சட்டத்தின் சக்தியால் கறுப்பின மக்களும் வெள்ளையின மக்களும் ஓரிடத்தில் கலந்து வாழ வைக்கப்பட்டதைப் போன்று, இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திலும் நகரத்திலும் தாழ்த்தப்பட்ட தொல்தமிழ் மரபினரான தலித் மக்களைத் தனிமைப்படுத்தி "சேரி, காலனி", என்று பலவகைப் பெயர்களால் அழைக்கப்படும் ஒதுக்கப்பட்ட இடங்களில் வாழ வைக்கப் படுவது தடை செய்யப் பட்டு குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும். இத்துடன் மற்ற மக்கள் வாழும் நகரம் மற்றும் கிராமத்தின் மய்யப்பகுதிகளில் தலித் மக்கள் வாழ நவீன வீடுகள் கட்டித் தரப் பட வேண்டும். சாதிச் சமூகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாழ வைக்கப்படுவதால்தான் தலித் மக்கள் எளிதாகத் தாக்கப் படுகிறார்கள். இத்துடன் அனைத்து சாதி வழி (குலத்) தொழில்களைத் தடை செய்ய வேண்டும். அனைத்துச் சாதிப் பெயர்களையும் தடை செய்ய வேண்டும். வேலையில்லாதோர்க்கும் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்க்கும் பாதுகாப்பு ஊதியம், உணவுப் பாதுகாப்பு மற்றும் அனைத்து நிலைகளிலும் அனைவருக்கும் கல்வி, மருத்துவ வசதி, வீட்டு வசதி ஆகியவை இலவசமாக கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.