




தொல் தமிழ் தலித் மக்கள், பழங்குடி மக்கள், நரிக் குறவர் போன்ற விளிம்பு நிலை மக்கள், மற்றும் நாட்டுப் புற மக்கள் ஆகியோரது இசை, கலைகள், பாரம்பரிய வாழ்வு முறைகள் ஆகியவற்றை எதிர்கால சந்ததியினர் என்றென்றும் தெரிந்து தம் மண்ணின் மக்களின் மாண்பை அறிந்து சிறக்க, தொல் மக்கள் பண்பாட்டுத் துறையும் (Ministry Of Indigenous Dravidian Tamil Culture) அது தொடர்பான ஆய்வு மய்யமும் காட்சியகமும் அரசால் நிறுவப்பபட வேண்டும். இம்மக்களின் கலைஞர்களுக்கும் அரசால் கலை மய்யங்கள் நிறுவப்பட்டு, அவர்கள் கலை வாழ்வு அரசுப் பணியாக தரப்பட்டு, அவர்களது கலைகளை மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கண்டு களிக்கும் வகையில் மாவட்டத் தலைநகரங்களில் அரசுக் கலையரங்குகள் காட்சியகங்கள் நிறுவப்பட வேண்டும். நம் தொல் பண்பாட்டையும் கலைகளையும் எதிர்கால தலைமுறையினர் மறந்தால் அவர்கள் (தமிழினத்) தன்னுணர்வையும் மறந்து போவார்கள். இது அனைத்திந்தியாவிலுள்ள அனைத்து தொல்லினத் தமிழ் (திராவிட) மரபின மக்களுக்கும் பொருந்தும். இது தொடர்பாகத் தொல் கலைகளை மய்யப்படுத்தி தமிழக அரசு நடத்திய "சங்கமம்" நிகழ்வுகள் நல்லதொரு உவப்புக்குரிய துவக்கமாகும். ஆனால், இக் கலைகளுக்கு மேற்கூறிய வகையில் நிரந்தரமான அமைப்பு ரீதியான அரசு ஆதரவு இன்றியமையாதது.