Tuesday, 8 July 2008

சிறு அலசல் : இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம்

பல இலட்சம் கோடி பெறுமானமுள்ள அணு உலைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்கி, அவற்றை இயக்க மீண்டும் பல லட்சம் கோடி பெறுமானமுள்ள அணு எரி பொருளை அமெரிக்காவிடம் என்றும் வாங்கிக் கொண்டு, இந்திய நாட்டைத் திவாலாக்கி, மக்களின் கல்வி, மருத்துவம், வீட்டு வசதி, சாலைகள், கழிவுச் சுகாதாரம், மலிவு விலை உணவுப் பண்டக (ரேஷன்) விநியோகம், வேலையில்லாதவர்க்கு பாதுகாப்பு ஊதியம், முதியோர்க்கு வாழ்வூதியம், போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை பன்னாட்டுத் தரத்தில் இந்திய மக்கள் அனைவருக்கும் என்றுமே செயல் படுத்த முடியாத வகையில் மத்திய அரசிடம் பணம் இல்லாமல் செய்யும் வகையில், எதிர்கால இந்திய மக்களைத் தொடரந்து வறுமையி்ல், கல்வியின்மையில், நோயில் வைத்திருக்கக் கூடிய இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்களையும் (மற்றும் இது போன்ற தேவையில்லாத இராணுவச் செலவுகளையும், விண்வெளித் திட்டச் செலவுகளையும்), இந்திய மைய அரசின் சனாதன அதிகாரிகளின் (இரு பிறப்பாளர்) வர்க்கமானது சனாதன அரசியல் வர்க்கம் (மற்றும்) ஊடக வர்க்கத்தின் துணையோடு தொடர்ந்து செயல் படுத்தி வருகிறது.




டென்மார்க், நார்வே, ஃபின்லாந்து, சுவிட்சர்லாந்து போன்ற பல நாடுகள் அணு உலைகளுக்கு செலவிடுவதில்லை, ராக்கெட் விடுவதில்லை, ராணுவத்திற்காகத் தேவையில்லாமல் செலவழிப்பதில்லை. ஆனால், மேற்கூறப்பட்ட அனைத்துத் தேவைகளையும் மக்களுக்கு அரசே செய்து கொடுத்து வளத்தில் வாழ வைக்கிறது. மேலும், இத்தகைய நாடுகளின் அரசுகள், போருக்கோ – இராணுவச் செலவுகளுக்கோ தேவையில்லாத வகையில் பிரச்சினைகளைத் தீர்த்து, அண்டை நாடுகளோடு ஒன்றியங்களை, கூட்டு அமைப்புக்களை வலுப்படுத்துகின்றன. ஆனால், இந்த நாடுகளில் இந்தியாவில் இருப்பது போல் மக்களைச் சாராத ஒரு ஆதிக்க இனம் ஆளும் அதிகார வர்க்கமாக இல்லை என்பதை உணர வேண்டும் !